வலைப்பதிவு சேவைகளும் எழுதுபொருட்களும்

வலைப்பதிவு சேவைகள்:

இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். பலருக்கு அலுவலக உபயோகத்துக்காக தங்கள் நிறுவனம் அளித்த மின்னஞ்சல் முகவரி இருந்தாலும், சொந்த உபயோகத்துக்கு இணையத்தில் இலவசமாய் கிடைக்கும் நிறைய மின்னஞ்சல் சேவைகளில் ஒரு பயனராகப் பதிந்து ஒரு முகவரியையையாவது பெற்றிருப்போம். ஹாட்மெயில், யாஹூ, ஜிமெயில், ரிடிஃப்மெயில் போன்றவை இந்த வகை இலவச மின்னஞ்சல் சேவைகளில் பிரபலமானவை.

இதே வகையில் வலைப்பதிவுகளையும் இலவச சேவைகளாக பல இணைத்தளங்கள் அளிக்கின்றன. சிறப்பான சேவை வேண்டுவோர் செலவு செய்து தங்களுக்கென்று தனிப்பட்ட வழங்கி(server)யில் பிரத்தியேகமான பல கூடுதல் வசதிகளையுடைய சேவைகளை அமைத்துக்கொண்டாலும், பெரும்பாலும் இந்த இலவச சேவைகளே ஒருவர் முதன்முதலில் வலைப்பதிவு செய்ய ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றில் முக்கியமான சில சேவையளிப்போரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

‘அதெல்லாம் சரி, எதற்கு இவர்கள் நமக்கு இலவசமாக அளிக்கிறார்கள்? எங்கிருந்து இவர்களுக்குப் பணம் வருகிறது?’ என்று கேட்கிறீர்களா.. நம் வலைப்பதிவுத் திரையில் விளம்பரங்களை காட்டுவதன் மூலம் இவர்கள் தங்கள் செலவுகளை ஈடுகட்டுகிறார்கள், மேலும் சம்பாதிக்கிறார்கள். மின்னஞ்சல் வசதியிலும் விளம்பரங்கள் இடையில் சொருகப்பட்டு வருவதைப் பார்த்திருக்கிறோமே!


ப்லாக்கர்.காம் (http://www.blogger.com)

இருக்கும் சேவைகளிலேயே மிகவும் விரும்பப்படுவது இதுதான். எளிய அமைப்புக்களுடன், அதே சமயம் தேவையான பல வசதிகளுடன் வருகிறது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததும், இணையத்தில் நெறிமுறைகள், சுதந்திரம், திறன், வேகம் ஆகிய அனைத்து அம்சங்களுக்காகவும் மதிக்கப்படுவதுமாகிய கூகிள் (google.com) தேடுபொறி நிறுவனம் அளிப்பது இது. எனவே நீண்ட நாள் நம்பகத்தன்மையுடன் இயங்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. நான் உள்பட பலரும் முதலில் வேறு சேவைகளை பாவித்து, பிறகு பல அம்சங்களில் இந்த ப்லாக்கர்.காம் சேவையின் அனுகூலங்களைப் புரிந்துகொண்டு, தங்கள் வலைப்பதிவை இந்த சேவைக்கு மாற்றி இருப்பதே இதன் முதன்மைத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தத்தொடரில் என்னுடன் கைகோர்த்து, நீங்கள் செய்துகொள்ளப் போகும் உங்கள் முதல் வலைப்பதிவுக்கு இதே சேவையைத்தான் பாவிக்கப் போகிறோம்.


Wordpress

Wordpress

வேர்ட்பிரஸ்.காம் (http://wordpress.com/)

ப்லாக்கர்.காம்-ஐ விடவும் இன்னும் கூடுதல் வசதிகள் பல தரும் இந்த சேவையும் சிறப்பாகவே வேலைசெய்கிறது. ஆனால் உங்கள் வலைப்பதிவின் HTML ஐ மாற்றும் வசதியை வேர்ட்பிரஸ்.காம் வழங்குவதில்லை. இதனால் தமிழ்மணம் உள்ளிட்ட தளங்கள் வழங்கும் கருவிப்பட்டைகளை வேர்ட்பிரஸ்.காம் தளங்களில் இணைக்க முடியாது என்பது தான் வேர்ட்பிரஸ்.காம் சேவையில் இருக்கும் பின்னடைவு ஆகும்.


வேர்ட்பிரஸ்.ஆர்க் (http://wordpress.org/)

wordpress.org

wordpress.org

வேர்ட்பிரஸ்.காம் பார்த்தோம் ? அதற்கும் வேர்ட்பிரஸ்.ஆர்க் என்ற தளத்திற்கும் என்ன வேறுபாடு ? வேர்ட்பிரஸ்.காம் இயங்கும் மென்பொருளை திறவுமூலமாக (open source) வேர்ட்பிரஸ்.ஆர்க் தளம் வழங்குகிறது. சரி…என்ன வேறுபாடு ?

உங்களுக்கு என்று தனி இணையத்தளம் உருவாக்கி கொள்ள வேண்டுமா ? http://yourname.wordpress.com என்றோ http://yourname.blogspot.com என்றோ இருப்பது உங்களுக்கு உவப்பு இல்லாமல், உங்கள் பெயருடன் ஒரு தளம் வேண்டுமா ? உதாரணமாக http://vinavu.com என்ற தளம் ? இதற்கு வேர்ட்பிரஸ்.ஆர்க் மென்பொருள் பயன்படும். உங்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்தால் இதில் புகுந்து விளையாடலாம். வேர்ட்பிரஸ்.காம் சென்று மென்பொருளை தரவிறக்கி (download) உங்கள் தளத்தில் நிறுவி விட்டால் உங்கள் தளம் நீங்கள் சொன்னபடி கேட்கும்.  உங்களுக்கு நிரலி  (Program) எழுத தெரிந்தால் உங்கள் தளத்தை நீங்கள் விரும்பியபடி மாற்றலாம்.

வேர்ட்பிரஸ்.ஆர்க் மூலம் மட்டும் தான் வைத்து கொள்ள முடியுமா ? எனக்கு ப்ளாகர் பிடித்து இருக்கிறது ? அதில் வைத்துக் கொள்ள முடியாதா ?  முடியும். உதாரணமாக http://tamilsasi.com/ என்ற தளம் அவ்வாறு தான் இயங்குகிறது. உங்கள் ப்ளாகர் தளத்தில் இது குறித்த விபரங்கள் இருக்கும்.


இன்னும் பல வலைப்பதிவு சேவைகள் இருந்தாலும் ப்ளாகர்.காம், வேர்ட்பிரஸ்.காம், வேர்பிரஸ்.ஆர்க் மென்பொருள் போன்றவை தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எனவே புதிய வலைப்பதிவு தொடங்குபவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பது தான் நல்லது. பிற வலைப்பதிவு சேவைகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகள் ஆதரிப்பதில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்


இந்தத் தொடரைப் பொறுத்தவரை நாம் முதலில் சொன்ன ப்லாக்கர்.காம் சேவையை மட்டும் இனிமேல் கவனத்தில் கொள்வோம். ஒரு பரஸ்பர புரிதலுக்காகவும், ஒரு குறிப்பிட்ட சேவையை மட்டும் எடுத்துக்கொள்வதால் நம் நேரம் வீணாவதைத் தவிர்க்க இயலும். ஆனாலும், பெரும்பாலான செய்முறைகள் அமைப்புகள் எல்லா சேவைகளிலும் உள்ளவையே. எனவே, வேறு சேவைகளை விரும்புபவர்களுக்கும் இந்த தொடரில் காணும் விபரங்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.


அப்பாடா, ஒரு வழியாக, தியரி கிளாஸ் முடிந்தது; இனி பிராக்டிகலுக்குப் போவோமா?

இது வரை நாம் வலைப்பதிவுகளைப் பற்றி அறிதல் என்ற கட்டத்திலேயே இருந்தோம். இனி மேல்தான் நம் வலைப்பதிவு தொடங்குவதற்கான முதல் செயலில் இறங்கப் போகிறோம். அந்த முதல் செயல் தமிழில் எழுத ஏதுவான ஒரு கருவி. கருவி என்றதும் எங்கோ வாங்கிவந்து நம் கணினியில் இணைக்கப் போகிறோமோ என்று எண்ணவேண்டாம். இது மென்பொருள்(Software). எனவே இணையத்திலிருந்து நாமே இறக்கிக்கொண்டு நம் கணினியில் நிறுவிக்கொள்ளப் போகிறோம்.

உங்களில் பலர் ஏற்கனவே கணினியில் தமிழ் எழுதும் வசதியை ஏற்படுத்தியிருப்பீர்கள். சிலர் கணினியில் இதுவரை தமிழ் படித்ததோடு சரி, ஒரு வரிகூட எழுதியதில்லை என்னும் நிலையில் இருக்கலாம்.

நமக்கு தமிழ் எழுதத் துணையாக இன்று பல கருவிகள் உள்ளன. அழகி, முரசு அஞ்சல் என்னும் செயலிகள் (software programs). இ-கலப்பை, NHM Writer போன்ற தட்டச்சு செலுத்திகள் (keyboard driver). இணையத்திலேயே எழுதும் வசதியுள்ள கருவிகளான (Online tools) புதுவை – தமிழ் எழுதி, கூகுள் கருவி போன்றவைகள். இவ்வாறான பல மென்பொருட்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும்.

இவ்வாறான பல மென்பொருட்களில் பலராலும் அதிகம் பயன்படுத்தப்படுவது இ-கலப்பை என்பதால் நாம் அதை இறக்கி நிறுவிக்கொள்ளப் போகிறோம்.

ஏற்கனவே தமிழ் எழுதும் (தட்டச்சும், உள்ளிடும்..) வசதி வைத்து இருப்பவர்கள் இந்தப் படியை தாண்டிச் செல்லலாம். புதிதாய் வேண்டுபவர்கள் இதோ கீழே உள்ள சுட்டியிலிருந்து ‘இ-கலப்பை’யை இறக்கிக் கொள்ளுங்கள்.

http://code.google.com/p/ekalappai/downloads/list

இந்த இ-கலப்பை இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு எளிய மென்பொருள். மேலே கொடுக்கப்பட்ட சுட்டி, உங்களை இ-கலப்பை இறக்கிக்கொள்ள உதவும் ஒரு பக்கத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தமிழ் தட்டச்சுக்கு முற்றிலும் புதியவர் என்றால் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே தமிழ் தட்டச்சு செய்யும் Phonetic முறையில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக ஆங்கிலத்தில் thamiz என்று தட்டச்சு செய்தால் ”தமிழ்” என்று இ-கலப்பை தமிழில் மாற்றி கொடுக்கும்.

என்ன மிகவும் எளிதாக உள்ளதா ? தமிழ் தட்டச்சு செய்வது மிகவும் எளிமையானதே. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் தட்டச்சு பழக்கம். பழக பழக வேகமாக சில மணி நேரங்களில் ஒரு சிறுகதையையோ, குறுநாவலையோ, கட்டுரையோ எழுதி விட முடியும்.

இ-கலப்பை செயல்படும் விதம்

இ-கலப்பை நிறுவியபின் உங்களுக்கு மூன்று வகையான விருப்பங்களை இது அளிக்கிறது. alt+2 தட்டினால் நமக்கு வலைப்பதிவுகளுக்கு பயனாகக் கூடிய யுனிகோடு (unicode) என்ற வகைக் குறியேற்றம் (encoding) தெரிவு செய்யப்படுகிறது. alt+3 தட்டினால் திஸ்கி (TSCII) என்ற தகுதரம் தெரிவு செய்யப்படுகிறது. ‘திஸ்கி’ ஒரு பழைய (Legacy) குறியேற்றம். திஸ்கி தற்பொழுது அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் இ-கலப்பை மேம்படுத்தப்படும் பொழுது ’திஸ்கி’ விலக்கப்படக்கூடும். எனவே நாம் யுனிகோடு முறையையே அதிகம் பாவிக்கலாம். alt+1 தட்டினால் பழையபடி ஆங்கில (ரோமன்) எழுத்துக்களுக்கு உங்கள் விசைப்பலகை திரும்பிவிடுகிறது. இதனால், மற்ற எந்த வேலைக்குப் பயன்படும் கணினியிலும் இந்த மென்பொருளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த முடிகிறது. யுனிக்கோடு முறையைப் பாவிக்கவேண்டிய அவசியம் அதன் குறை-நிறைகளைப் பற்றி நிறையக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் யுனிகோடின் பொதுவான சில அனுகூலங்களை இங்கே குறிப்பிடலாம்:

கூகிள் போன்ற தேடும் பொறிகளில் தனித்துவத்துடன் தேடும்போது அகப்படும் வசதி. உதாரணமாய் ‘தமிழ்’ என்ற சொல்லை கூகுளில் தேடிப் பாருங்கள். தமிழ் சார்ந்த தளங்களை கொண்டு வந்து கொடுக்கும்.

இன்னொரு அனுகூலம், விண்டோஸ் இயங்குதளங்கள் வரும்போதே தமிழ் யுனிகோடு எழுத்துரு(font)வாவது தன்னுள்ளே அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் யுனிகோடில் அமைந்த இணையப் பக்கங்களை, அவை, தாம் இயங்க ஆரம்பித்த முதல் நொடியிலிருந்தே, எந்த மேலதிக மென்பொருளும் நிறுவப்படாமல் திரையில் காட்டும் திறன் படைத்துள்ளன.

ஆக, நீங்கள் இப்போது இ-கலப்பையை நிறுவி, எளிய உரை எழுதும் செயலியான நோட்பேட் (notepad) கொண்டு அதை சோதித்து வையுங்கள். மேலும் உங்கள் வலைப்பதிவுக்கு நல்லதாக ஒருபெயர், விளக்கம் போன்றவற்றையும் யோசித்து வையுங்கள். அடுத்த பாகத்தில் உங்கள் முதல் வலைப்பதிவு அரங்கேற.. இல்லை வலையேறப்போகிறது!

Comments are currently closed.