ஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்

முந்தைய கட்டுரைகளில் வலைப்பதிவு எதற்கு என்பதையும், வலைப்பதிவு சம்பந்தப்பட்ட சில முக்கியக் கேள்விகளுக்கு விடையையும் பார்த்தோம். வலைப்பதிவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் சில சுட்டிகள் கொடுத்திருந்தோம், அவற்றிலும் சிலவாவது சென்று பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆக, வலைப்பதிக்கவேண்டும் என்று நீங்கள் தயாராகியிருப்பீர்கள்.

நமக்காக நாமே ஒரு வலைப்பதிவு உருவாக்கப் போகிறோம். அதன் முதல் படியாக வாசகர் பார்வையிலிருந்து ஒரு வலைப்பதிவின் முக்கியமான அம்சங்கள் என்னென்ன என்று காணலாம். பின்னால் நாம் சில பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது குழப்பம் எதுவும் வராமல் இருக்கவும் இந்த விளக்கம் அவசியம். இதோ ஒரு எளிமையான வலைப்பதிவின் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறிப்போமா?

கீழே உள்ள படத்தின் உள்ள எண்களின்மேல் அல்லது முக்கியப்பகுதிகளின்மேல் சொடுக்கினால் அதைப் பற்றிய விளக்கத்தை அறியலாம்.

இனி இந்தப் படத்தில் குறிக்கப்பட்ட ஒவ்வொரு பாகத்தின் தேவையையும் அவற்றின் விளக்கங்களையும் பார்க்கலாம். கூடவே ஆங்கிலப்பெயர்களையும் பயன்படுத்தலாம். இந்த வேலைகள் செய்யத்தேவையான ஆங்கில அறிவு கொஞ்சமே, அது இன்று தமிழறிவைவிட நம் மக்களிடம் அதிகமாகவே இருப்பதால், இது ஒரு பிரச்னையில்லை!


1. வலைப்பதிவின் பெயர் (Title):

ஒவ்வொரு வார இதழ், இணைய இதழ், புத்தகம் எல்லாவற்றையும் போல நம் வலைப்பதிவிற்கு இதுவே அடையாளம். சிலர் தன் பெயரிலேயே தன் வலைப்பதிவையும் வைத்திருக்கிறார்கள். சிலர் எண்ணங்கள், கிறுக்கல்கள், சிந்தனைகள் என்று வைக்கிறார்கள். நம் கற்பனைக்குதிரையை இங்கிருந்தே ஓட்ட ஆரம்பிக்கலாம். எதுவாக இருந்தாலும் நல்ல தமிழ்ப்பெயராக வைத்துக்கொள்ளுவது நல்லது. இது என் தனிப்பட்ட ஆலோசனை.

2. வலைப்பதிவைப்பற்றிய விபரம்(Description):

ஒரு வலைப்பதிவர் தன்னைப்பற்றி அல்லது இங்கு எதைப்பற்றியெல்லாம் எழுதப்படும் என்பது பற்றி இங்கு குறிக்கலாம். இது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பகுதி. அவரவர் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், புதிதாக வலைப்பதிவுக்கு வருகை தரும் ஒரு வாசகருக்கு இங்குதான் அந்த வலைப்பதிவைப்பற்றிய முதல் அபிப்ராயம், உருவம் கிடைக்கப் போகிறது. அது நல்லதாக, உண்மையாக, தெளிவாக இருக்கும்படி இருக்க வேண்டும். இது ஓரிரு சொற்றொடர்களில் இருத்தல் நலம்.

உதாரணங்கள்:

வினவு, வினை செய் !
விரிவெளித் தடங்கள்

மேலே கண்ட இரண்டும் ஒரு வலைப்பதிவின் முகப்பில் இருக்கும் நிலையான அம்சங்கள். இது போல இன்னும் இரு நிலையான பகுதிகள் பொதுவாக ஒரு வலைப்பதிவில் காணப்படும். அவை என்ன என்று அடுத்துக் காண்போம்.


3. முந்தையவை (Archives):

நாம் முன்னமே பார்த்ததுபோல, ஒரு வலைப்பதிவு தொடர்ந்து புதிய எழுத்துக்களால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கப்படும் ஒன்றுதானே. எனவே முகப்புப் பக்கத்திலேயே இதுவரை ஒருவர் எழுதிய அனைத்தையும் காட்டினால் எப்படி இருக்கும்? பார்ப்பவர்கள் இது என்னடா சோதனை என்று எண்ண மாட்டார்களா? உதாரணமாக ஒரு ஐம்பது விஷயங்களை ஒருவர் இதுவரை எழுதியிருந்தால் அந்த ஐம்பதும் முன்பக்கத்தில் காட்டப்படுவதில்லை. கடைசியாக எழுதப்பட்ட விஷயம் முதலில் வரும்படிதான் பொதுவாக வலைப்பதிவுகள் அமைக்கப்பட்டிருக்கும். அத்தோடு முகப்புப் பக்கத்தில் எத்தனை விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதை நாம் வலைப்பதிவின் அமைப்பு விவரங்களை மேலாண்மை செய்யும்போது வரையறுத்துவிடலாம்.

இப்படி வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை விஷயங்கள் தவிர, அதற்குமுன் எழுதப்பட்டவற்றை தானாகவே வாரவாரியாகவோ, மாதவாரியாகவோ கோர்த்து, அவற்றைத் தனியான வலைப்பக்கங்களாக்கி, அவற்றுக்கு சுட்டிகளும் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இதையெல்லாம் பொறுமையாகச் செய்வது? அந்தக் கவலையே நமக்கு வேண்டாம். எல்லாவற்றையும் வலைப்பதிவுச்சேவையே பார்த்துக்கொள்ளூம். இதுவும் வலைப்பதிவை வலைத்தளங்களிலிருந்து வேறுபடுத்தும் பல அம்சங்களில் ஒன்று.


4. இணைப்புகள் (Links):

அடுத்த முக்கியமான பாகம் இது. ஒவ்வொரு வலைப்பதிவும் தனித்து சுயேச்சையாய் இயங்குவதில்லை. இணையமே ஒரு மிகப்பெரும் கூட்டுறவு அமைப்புத்தானே. அதே கருத்தில் ஒவ்வொரு வலைப்பதிவரும், தங்களுக்கு விருப்பமான, தங்கள் வாசகருக்குப் பயனாகக்கூடிய வேறு இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது வழக்கம். இது முழுக்க முழுக்க ஒருவலைப்பதிவரின் விருப்பமே. நம் நண்பர்களின் வலைப்பதிவுகள், தமிழ் மென்பொருள்/எழுத்து உதவி சம்பந்தமான தளங்கள், வலைப்பதிவுகளின் சஞ்சிகை, பட்டியல் போன்றவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது நல்லது.

இதுவரை பார்த்தவை ஒரு வலைப்பதிவின் நிலையான அம்சங்கள். இனி வரப்போவது மாறும் அம்சங்கள்.


5. இடுகை (Post or Entry):

இதுதான் ஒருவர் எழுதிக்குவிப்பது. ஒவ்வொரு முறையும் அவர் எழுதிப் பதிப்பிக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு இடுகை (இடப்படுவது, one that is posted) எனலாம். சாதாரணமாக ஒரு இடுகை ஒரு வரியிலிருந்து, சில 100 வரிகள் வரை இருக்கலாம். தினமும், அல்லது சில நாட்களுக்கு ஒருமுறை இடப்படுவதாயின், 100 வரிகளுக்கும் மிகாமல் இருந்தால் வாசிப்பவர்களுக்கு ஆர்வக்குறைவில்லாமல் இருக்கும். இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அவரவர் விரும்பியதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பதிப்பிப்பதுதானே வலைப்பதிவின் மையக்குறிக்கோள், எனவே இதன் நீளம் நம் விருப்பம். இடுகைகள் வெறும் கட்டுரைகளாக இல்லாமல், சுட்டிகள், படங்கள், பட்டியல்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்தாலே இணையத் தொழில்நுட்பத்தின் முழுவீச்சினையும் பயன்படுத்தியதாக ஆகும். இவை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை, பின் வரும் பாகங்களில் விளக்கமாகப் பார்க்கலாம்.


6. இடுகையின் தலைப்பு (Title of the Post):

இதைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வோரு இடுகைக்கும் ஒரு அர்த்தமுள்ள தலைப்பிடுவது, வாசிப்பவருக்கு மிகவும் பயனுள்ளது. தங்கள் நேரத்தை ஒருவர் செலவிடும் முன் அது தேவைதானா என்பதை இதை வைத்து முடிவுசெய்ய முடியும். சில விசேட குறிக்கோள்களுடன் இயங்கும் வலைப்பதிவுகள், தலைப்பில்லா இடுகைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் அது அவ்வளவு விரும்பத் தகுந்ததல்ல.


7. இட்டவர் பெயர், மற்றும் நேர முத்திரை? (author and Time-stamp)):

பலரும் எழுதும் கூட்டு வலைப்பதிவுகளில் இந்த விபரங்கள் முக்கியமாகத் தேவை. ஒருவர் மட்டும் எழுதும் வலைப்பதிவுகளில் யாரால் எழுதப்பட்டது என்பது பெரிய தகவல் அல்ல. ஒரு நாளைக்குப் பலமுறை எழுதப்படும் வலைப்பதிவுகளில் ஒவ்வொரு இடுகையும் எந்த நேரத்தில் இடப்பட்டது என்பதைக்குறிக்கும் நேரமுத்திரை முக்கியமானது. மற்றபடி இந்தத்தகவல்கள் பெரிய முக்கியத்துவம் இல்லாதவையே. ஆனாலும் பெரும்பாலான வலைப்பதிவு சேவைகள், இந்த விவரத்தையும் தானாகவே காட்டும்படி அமைக்கப்பட்டே வருகின்றன.


8. நாள் முத்திரை (Date-line):

இதுவும் தானாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஒரே நாளில் பல இடுகைகள் இருந்தால் அவையனைத்தும் இந்த நாள் முத்திரைக்குக் கீழ் காட்டப்படும். ஒரு இடுகை என்று எழுதப்பட்டது என்ற விவரம் பலசமயம் முக்கியமான ஒன்று. அதிலும் தினமும் புதுப்புது விஷயங்களை எழுதும்போது, பல நாள் கழித்துப் பார்த்தால் அது என்று எழுதப்பட்டது என்பதை வைத்து அன்று நம் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்று அறியவும் இது பயனாகிறது.


9. நிலையான சுட்டி (Permalink):

ஒருவர் தம் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஒரு விஷயத்தை இன்னொருவருக்குச் சுட்ட விரும்புகிறார் எனக் கொள்வோம். அவர் வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் அந்த விஷயத்தைப் படித்து, அதே முகப்புப் பக்கத்தின் உரலை (URL) மின்னஞ்சல்மூலம் அனுப்புகிறார். அதைப் பெறுபவர், அந்த உரலை தன் உலாவியில் இட்டால் அதே பக்கம் அவரது கணினித்திரையிலும் தெரிகிறது. ஆனால் நாம் ஏற்கனவே கண்டபடி இன்று முகப்புப் பக்கத்தில் இருப்பது சில நாள் கழித்து ‘முந்தைய’ பக்கங்களில் ஏற்றப்பட்டுவிடும். புதிதாய் இடப்பட்டவை முகப்புப் பக்கத்தில் இருக்கும். எனவே அவர் தேடியது கிடைக்காமல் போகுமல்லவா? இந்தப் பிரச்னைக்கு விடைதான் இந்தப் புத்தக்கக்குறி. ஒவ்வொரு இடுகைக்கும், வலைப்பதிவுசேவையே ஒரு நிலையான உரலை அளிக்கும். அந்த உரல் வேண்டுவோர் இந்த புத்தக்ககுறியைச் சொடுக்கினால், உலாவியின் முகவரிக் கட்டத்தில் இப்போது முழு உரலும் தெரியும். இதை நகலெடுத்து இன்னொருவருக்கு அனுப்பினால், எத்தனை மாதங்கள் கழித்தும் அந்தக் குறிப்பிட்ட இடுகையை எட்டமுடியும்.

பெரும்பாலும் இது # குறியால் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் நாம் பிறகு நம் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.


10. மறுமொழிகள் (அல்லது) பின்னூட்டங்கள் (Comments):

வலைப்பதிவின் இன்னொரு முக்கிய அம்சம், வாசிப்பவர் தன் கருத்தை உடனுக்குடன் பதிக்கும் வசதி. இது யாருடைய ஈடுபாடும் தேவையின்றி தானாக நடக்கும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். வழக்கமாக இதுவரை எத்தனை மறுமொழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற விவரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இங்கே இருக்கும். அதைச் சொடுக்கினால், அது இருக்கும் மறுமொழிகளை காட்டவும், மேலும் மறுமொழிகள் இடவும் வசதியுள்ள சன்னலுக்கு அழைத்துச் செல்லும். மேலதிகமாக நிறைய வசதிகள் செய்ய தேவையும் வாய்ப்பும் உள்ள இடம் இந்த மறுமொழிப் பெட்டி. அதை பின் வரும் பாகங்களில் விபரமாகக் காணலாம்.


அப்பாடா, ஒரு வறட்சியான கட்டத்தைத் தாண்டிவிட்டோம். ஆனால் இந்த விஷயங்களைப் பற்றி நம்மிடம் தெளிவு இல்லையென்றால் மேற்கொண்டு நாம் செய்யப்போகும் வேலைகளில் காலமும், உழைப்பும் வீணாகிவிடும், எனவே ஒருமுறைக்கு இருமுறை இவற்றைப் படித்து தெளிந்துகொள்வோம்.

இன்னொன்றையும் சொல்லலாம், மேலே கண்ட அமைப்புகள் ஒரு எளிமையான வலைப்பதிவின் அடையாளங்கள். இவற்றில் எதுவும் குறைந்தும் இருக்கலாம், அல்லது இன்னும் மேலதிகமாக வாக்குப்பெட்டி, அரட்டைப்பெட்டி, போன்ற பல கூடுதல் வசதிகளும் இருக்குமாறும் அமைக்கலாம். எல்லாமே அவரவர் விருப்பத்தைம், திறமையையும் பொறுத்தது.

அடுத்த பாகத்தில் இலவசமாகக் கிடைக்கும் வலைப்பதிவு சேவைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, தமிழில் எழுதத் தேவையான அடிப்படை மென்பொருட்கள் பற்றியும் காணலாம்.

Comments are currently closed.