வலைப்பதிவுகள் – சில கேள்விகள்

சிலர் சொந்தமாக வலைப்பக்கம் வைத்திருக்கிறார்களே, அதற்கும் வலைப்பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?


ஓரளவுக்கு கணினி அறிவு வேண்டும் என்றால், எந்த அளவுக்கு?

(இந்தப் படத்தில் காணப்படும் பெண் படம் ஒரு குறியீடு மட்டுமே. இதுவே ஆணுக்கும் பொருந்தும். எனவே பெண்களே கோபப்படவேண்டாம், இந்தப் படம் வெறும் நகைச்சுவைக்காக )

இணையத்தில் உலாவுவதற்கு நமக்கெல்லாம் தெரியும். எழுத்தை வாசிக்கத் தெரிந்த எவரும், சில நிமிடப் பழக்கத்திலேயே இதைக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள். இந்த இணையப் பக்கத்தை வாசித்துக்கொண்டிருப்பதே அத்தகைய ஒரு அறிவுநிலை. இதற்கு அடுத்த நிலையாக மின்னஞ்சல் கையாளுவதைச் சொல்லலாமா? இணையத்தில் உலாவத்தெரிந்த அனைவருமே இன்னும் சிறிது பழகிக்கொண்டு மின்னஞ்சல் சேவையைக் கையாளுகிறோம் அல்லவா? அதற்கு அடுத்த நிலையாக வலைப்பதிவைச் சொல்லலாம், அவ்வளவுதான். மேலதிகமாய் இன்னும் ஓரிரு புதிய விஷயங்களைப் புரிந்து கையாள ஆரம்பித்தால் வலைப்பதிவு நம் வசத்தில்.

இணையத்தில் சில நாட்களாகவாது மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தியிருந்தால் வலைப்பதிவுக்குத் தேவையான அறிவு உங்களுக்குத் இருக்கிறதென்று பொருள்.


தமிழில் தாளில் எழுதத் தெரியும். தட்டச்சு செய்யத் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் தமிழ் கீபோர்ட், சாப்ட்வேர் எல்லாம் வேண்டுமே எங்கே போவது?

தட்டச்சு என்பதை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு முழுநேர எழுத்தாளர் ஒரு நாளைக்கு ஒரு ஐம்பது பக்கம் எழுதலாம். ஒரு அலுவலகத் தட்டச்சர் ஒரு நாளைக்கு இருபது கடிதங்களை தட்டச்சு செய்யலாம். ஆனால் ஒரு வலைப்பதிவர் மிஞ்சிப்போனால் ஒரு பக்கம், இரண்டு பக்கம் செய்யவேண்டியிருக்கலாம். இதற்கு பெரிய தட்டச்சுத் ‘திறமை’ வேண்டியதில்லை.

மின்னஞ்சல் கையாளும் நாம் அனைவரும் அறிந்த ஒரு அடிப்படை உண்மை, மின் வடிவங்களில் இருக்கும் ‘திருத்தி எழுதும்’ வசதி. ஒரு தட்டச்சு இயந்திரத்தில் இருப்பதைப்போல அடித்த எழுத்தை ரப்பரைக் கொண்டு அழிப்பதில்லை நாம். அதே வழியில், தமிழில் கணினிமூலம் எழுதும்போதும் கண்முன்னே தவறு தெரிந்தால் திருத்தி அடித்துக்கொள்ளப் போகிறோம், இது என்ன தலையெழுத்தா மாற்ற முடியாமல் போவதற்கு? தமிழார்வமும், கணினி நுட்பமும் அறிந்த ஆர்வலர்கள் பலர் நமக்காக, தேவையான எல்லா மென்பொருட்களையும் இலவசமாக அளிக்கிறார்கள். நம் ஆர்வமும், ஈடுபாடுமே அவர்களின் உழைப்புக்கு நாம் செய்யும் மரியாதை. எங்கு இவை கிடைக்கின்றன, எப்படி இவற்றை நிறுவி இயக்குவது என்பதை அடுத்து பார்க்கலாம்.


சரி, நான் தேவையான சாப்ட்வேரெல்லாம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து பயன்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். என் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் தமிழ் எழுத்து சரியாய்த் தெரியுமா? இப்போதே ஒரு சில பத்திரிகைகள் படிக்க முடிவதில்லை. நிறைய ஃபான்ட் தொல்லைகள். இதுக்கு என்ன செய்வது?

அதற்கும் இப்போது வழி கிடைத்துவிட்டது. ஆங்கிலம் மட்டும் புழங்கிவந்த காலத்தில் கணினியில் தமிழைக் கொண்டுவர படாதபாடு பட்டிருக்கிறார்கள் நம் முன்னோடிகள். ஆனால் இன்றைக்கு எல்லா இடங்களிலும் தரப்படுத்துதல் வந்துவிட்டது. ஆங்கிலத்துக்கு வெளியே கணினிப் பயன்பாட்டை விரிவாக்கவேண்டிய தேவையை உணர்ந்த பல கணினியியல் அமைப்புக்கள் பல மொழிகளுக்கும் எழுத்துருக்களை தரப்படுத்தியுள்ளன. யுனிகோடு என்றழைக்கப்படும் இந்த தரநிர்ணயத்தில் அமைந்த பன்மொழி எழுத்துருக்கள் இன்று பல இயங்குதளங்களிலும் (ஆபரேடிங் சிஸ்டம்ஸ்) நிறுவும்போதே அல்லது வாங்கும்போதே அமைக்கப்பட்டு வருகின்றன. கொஞ்சம் பழைய இயங்குதளங்களானால் இவற்றை மேலதிக வசதிகளாக நிறுவிக்கொள்ளவும் முடிகிறது.

இதே யுனிகோடு மூலமாகத்தான் தற்பொழுது இணையத்தில் பல தமிழ் தளங்கள் இயங்கி வருகின்றன.


என்னென்னவெல்லாம் எழுதலாம்? இலக்கியமெல்லாம் எனக்கு வராதே…”

என்னவெல்லாம் நம்மைப் பாதிக்கிறதோ, என்னவெல்லாம் நம் உள்ளத்துக்கு வெளியே கொட்ட விரும்புகிறோமோ, என்னவெல்லாம் பகிர்ந்துகொண்டால் நமக்கும், வாசிப்பவருக்கும் சிறு பயனாவது இருக்குமோ, அதை எல்லாம் எழுதலாம். ஒருவர் தாம் சார்ந்த துறையைப் பற்றி எழுதலாம். தம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி, அதில் தாம் பெற்ற அனுபவங்களைப் பற்றி எழுதலாம். நம் ஊரில் தேர்தல் நடக்கிறது. சுவாரசியமான பேச்சுக்களைப்பற்றி, அவை நமக்குள் எழுப்பும் கேள்விகளைப் பற்றி, எழுதலாம். நேற்றுப் பார்த்த சினிமாவைப் பற்றி, இன்று தொலைக்காட்சியில் கண்ட கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி எழுதலாம்.

நமக்கு இலக்கிய ஆர்வம் இருப்பின் கவிதைகளை, கதைகளை எழுதி, மற்றவர்கள் விமரிசனத்துக்கு விட ஒரு வாய்ப்பாகக் கொள்ளலாம். அறிவியல், தொழில்நுட்பம் பற்றி எழுதலாம். அவ்வளவு ஏன், சுவையான ஒரு சமையல் குறிப்பு கூட, நம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இதில் பதித்து, அதன் சுட்டியை மின்னஞ்சலில் அனுப்பலாம். இன்னதுதான் எழுதலாம் என்ற எல்லை இல்லாத ஒரு ஊடகம், வலைப்பதிவைப்போல இன்னொன்று கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறி.


எனக்கு நான் சொல்ல நினைப்பதை எங்கேயாவது கொட்டிவிடவேண்டும் என்று ஆசை, ஆனால் என் பெயர் வெளியே தெரியக்கூடாது, இதுக்கு இதில் வழி இருக்கா?

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? உங்களுக்கு வலைப்பதிவு ஒரு வரப்பிரசாதமுங்க! புனைபெயரில் எழுதுங்க, முகமூடிபோட்டுக்குங்க, ஒரு பயலும் டச் பண்ணமுடியாது. முக்கியமாக விமரிசனக் கட்டுரை எழுத விருப்பம் உள்ளவர்கள் வலைப்பதிவின் மூலம், விருப்பு வெறுப்பற்ற வகையில் எழுதலாம்.


சரி, நான் பாட்டுக்கு எழுதித்தள்ளுகிறேன், இதை யாராவது படிக்கிறாங்களான்னு எப்படித்தெரிஞ்சுக்கிறது?

கவலையே படாதீர்கள்! இன்றைக்கு இணையத்தொழில்நுட்பம் தரும் பலவேறு பரிசுகளில் இம்மாதிரி தகவல்களும் அடக்கம். கொஞ்சம் முயற்சித்தால், எத்தனை பேர் படிக்கிறார்கள், எந்தக் கட்டுரையை நிறையப்பேர் படித்தார்கள், என்பதுபோல பலப்பல புள்ளிவிவரங்கள் நமக்குக் கிடைக்கும். எனவே நம் பிரபலத்தை நாமே அளந்துகொள்ளலாம்.


படிக்கிறவர்கள், தான் என்ன நினைக்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லமுடியுமா?

அதுதானே வலைப்பதிவின் மிக முக்கியமான பலமே. ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனியாக மறுமொழி வசதி கொடுக்கமுடியும். அதன்மூலம் ஒரு பொருளைப் பற்றிய வாசிப்பவர்களின் கருத்துக்களை சுடச்சுட அங்கேயே பதிக்க வசதி கிடைக்கிறது. இவ்வாறு ஒருவர் சொல்லும் மறுமொழியை அடுத்து வாசிப்பவர் பார்க்கக் கிடைப்பதன் மூலம் அவரும் இந்தத் தொடர் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கெடுக்கத் தூண்டுதலாகிறது. பலமுறை முதலில் எழுதப்பட்ட கட்டுரையைவிடவும் இந்த மறுமொழிச் சங்கிலிகள் சுவையாகவும் பயனுள்ளதாகவும் அமைவதைப் பார்க்கமுடிகிறது.


இதற்கு என்ன செலவாகும்?

செலவா? என்ன செலவு செய்ய நீங்கள் தயார்? பயந்துவிட வேண்டாம். பணச்செலவு என்று நீங்கள் செய்வது பூஜ்ஜியம். உங்கள் உழைப்பும், ஆர்வமும் மட்டுமே நீங்கள் செலவுசெய்ய வேண்டியவை. இதில் ஆழ்ந்துபோய் எக்கச்சக்கமாய் செய்யவேண்டும் என்று விரும்புபவர்கள் சிலசமயம் மேலதிக வசதிகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண வலைப்பதிவர் ஒரு பைசா செலவு செய்ய வேண்டியதில்லை. நம்புங்கள்!


என் எழுத்துக்களை யாரும் காப்பி அடித்துவிட்டால்?

இணையத்தில் பதிப்பிக்கப்படும் எதுவும் யாரும் எளிதில் காப்பியடிக்க ஏதுவானதுதான். எனவே இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியும். காப்பியடிக்கும் அளவுக்கு நாம் எழுதுகிறோமா என்று தெரிந்துகொள்ளவாவது இது பயன்படட்டுமே. அப்படி நம் எழுத்தின் மகிமை இருந்தால், நாமே வணிக ரீதியில் அவற்றைப் பதிப்பிக்கலாம். வார இதழ்களுக்கு எழுதலாம், சன்மானம் பெறலாம்.


இப்படிப் பதிப்பிப்பதால் எனக்கு எதாவது வருமானம் கிடைக்க வாய்ப்பு?

அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கூகுல் விளம்பரங்கள் மூலமாக நம் வலைப்பதிவில் வருமானம் ஈட்ட முடியும். நம் எழுத்து உண்மையிலேயே பலரை ஈர்க்கும் ஒன்றாக இருந்தால், நம் வலைப்பதிவில் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டலாம்.


இப்படி எழுதுவதால் எனக்கு ஏதும் தொல்லைகள் வருமோ?

மனதுக்குள் எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். டைரியில் என்ன வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம். ஆனால் ஒன்றைப் பொதுவில் வைக்கும்போது, அதற்கு முழுப்பொறுப்பு அதை எழுதியவருக்கு வந்துவிடுகிறது. எனவே இதைப் புரிந்து எதைத் தவிர்க்கவேண்டுமோ அதைத் தவிர்த்துவிட்டால் எந்தத் தொல்லையும் இல்லை. அதையும் மீறி பயமாக இருந்தாலோ, அல்லது சர்ச்சைக்குரிய ஒன்றை எழுதியே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாலோ இருக்கவே இருக்கிறது புனைபெயர், முகமூடி, இத்யாதி.


என்ன நண்பர்களே ஐயங்கள் தெளிந்தனவா? இனி ‘உங்களுக்கே உங்களுக்காக’ ஒரு வலைப்பதிவை செய்யலாமா? அடுத்த கட்டுரையில் ஒரு வலைப்பதிவை எப்படி தொடங்குவது என்பது குறித்து பார்க்கலாம்

Comments are currently closed.