தமிழில் எழுதலாம் வாருங்கள்

தமிழ் வலைப்பதிவுகள் அறிமுகப் பக்கம்

தமிழில் எழுதலாம் வாருங்கள்

தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள் ? இந்த அறிமுகப் பக்கங்கள் வலைப்பதிவுகள் குறித்த விரிவாக அறிமுகத்தை உங்களுக்கு வழங்கும்

ஆக்கம் : காசி

தமிழ்மணத்திற்காக புதுப்பித்தவர் : தமிழ் சசி

முதல் வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்

நம் முதல் வேலை, ப்லாக்கர்.காம் இணையத்தளத்தில் நமக்கு ஒரு கணக்கு (account) துவங்குவது. நீங்கள் ஏற்கனவே ஜிமெயில் வைத்திருக்கிறீர்களா ? அந்த மின்னஞ்சல் முகவரியின் பயனர் பெயர், கடவுச்சொல் (Username, Password) கொண்டு ப்ளாகர்.காம் தளத்தில் நுழைய முடியும்.

சரி வலைப்பதிவை ஆரம்பிக்கலாமா? அதற்குமுன், உங்கள் கணினியில் இ-கலப்பை இயங்கிக்கொண்டிருக்கட்டும், இணையத்தொடர்பு ஏற்படுத்தப் பட்டிருக்கட்டும்.ஒரு சோதனை வலைப்பதிவை உருவாக்குவோம். முதலில் ப்ளாகர்.காம் தளத்தில் பயனர் பெயர்/கடவுச்சொல் கொடுத்து உள்நுழையுங்கள்.

நீங்கள் உள் நுழைந்தவுடன், கீழ்கண்ட பக்கத்தை நீங்கள் பார்க்கலாம்

இங்கு நீங்கள் ஜீமெயிலில் பதிவு செய்த உங்கள் பெயரும், மின்னஞ்சலும் தெரியும் (இந்தப் படத்தில் மறைக்கப்பட்டுள்ளது). Display Name என்ற இடத்தில் உங்கள் பெயரையோ, புனைப் பெயரையோ இட வேண்டும். தமிழ் வலைப்பதிவுகளுக்கு தமிழில் வைத்துக் கொள்வதே சிறப்பானது. இ-கலப்பையில் alt+2 தேரிவுசெய்வதன்மூலம் நம்மால் இந்த விபரங்களைத் தமிழிலேயே உள்ளிடமுடியும். இதனையெடுத்து Continue என்ற பொத்தானை அழுத்தினால் அடுத்து கீழே உள்ள பக்கம் வரும்

இங்கே தான் நம் வலைப்பதிவின் பெயர், மற்றும் வலைப்பதிவின் முகவரி (Blog Address) ஆகியவற்றை இடுகிறோம்.  படத்தில் பாருங்கள் நான் செய்ததை.இதையெடுத்து Continue என்ற பொத்தானை அழுத்துங்கள்

கீழே உள்ளது போன்ற அடுத்த பக்கம் வரும்

இந்தப் பக்கத்தில் நம் வலைப்பதிவு எப்படி தோற்றம் அளிக்க வேண்டும் என்ற அடைப்பலகையை (Template) தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போதைக்கு ஒரு அடைப்பலகையை தேர்தெடுத்துக் கொள்ளலாம். இணையத்தில் உங்கள் ரசனைக்கேற்ற பல அடைப்பலகைகள் இலவசமாக கிடைக்கின்றன. வலைப்பதிவு உங்களுக்கு நன்றாக பழக்கமான பிறகு அடைப்பலகையை மாற்றிக் கொள்ளலாம். ஒரு அடைப்பலகையை தேர்ந்தெடுத்துக் கொண்டு Continue என்ற பொத்தானை அழுத்துங்கள்.

அடுத்த பக்கம் கீழே உள்ளது

அவ்வளவு தான். உங்கள் வலைப்பதிவு உருவாக்கப்பட்டு விட்டது. உங்கள் வலைப்பதிவின் முதல் கட்டம் முடிந்து விட்டது. இனி உங்கள் வலைப்பதிவில் இடுகைகளை (Posts) சேர்க்க வேண்டும்.

இப்பொழுது “START BLOGGING” என்ற பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வலைப்பதிவிற்கு இடுகையை சேர்க்கும் கீழ்க்கண்ட இடைமுகம் வரும்

இந்த இடைமுகத்தில் தான் நாம் நமது இடுகைகளை வலைப்பதிவுல் வெளியிட (Publish) வேண்டும். முதலில் உங்கள் இடுகைக்கு ஒரு தலைப்பை தெரிவு செய்யுங்கள். சோதனைக்காக சோதனை இடுகை என வைத்துக் கொள்வோம். உங்கள் இடுகையை படத்தில் உள்ளது போல எழுதலாம். அடுத்ததாக குறிச்சொல். உங்கள் இடுகைக்கு சில குறிச்சொற்களை கொடுக்க வேண்டும். அது என்ன குறிச்சொல். ஆங்கிலத்தில் இதனை Tag என அழைப்பார்கள். உங்கள் இடுகையை எதனைச் சார்ந்தது என்பது குறித்த சில குறிப்புகளே குறிச்சொல் ஆகும். உதாரணமாக அரசியல் என்று குறிக்கலாம். எதனைக் குறித்து என்பதை குறிப்பாக உணர்த்த குறிச்சொலை பயன்படுத்த வேண்டும். அரசியல் என்ற பொதுவான குறிச்சொல்லுடன் திமுக, தேர்தல் 2011, பிரச்சாரம், சென்னை, தாம்பரம் பொதுக்கூட்டம் என பல குறிச்சொற்களை ஒரு இடுகைக்கு வைக்கலாம்.

சரி…எதற்கு குறிச்சொல் வைக்க வேண்டும் ? அதன் பயன் என்ன ?

கூகுள் மூலமாக பலர் பலவற்றை தேடுகிறார்கள். ஒருவருக்கு அரசியல் என்று தேடினால் உங்களுடைய இந்தக் கட்டுரை கூகுளில் தெரியும். ஒருவர் தாம்பரம் பொதுக்கூட்டம் என குறிப்பாக தேடினாலும் உங்களுடைய இந்த இடுகை கூகுள் தேடுதலில் வரும். பல பொருத்தமான குறிச்சொற்களை கொடுப்பது ஒரு சிறந்த உத்தி ஆகும்.

சரி இடுகை எழுதியாயிற்று, குறிச்சொல் வைத்தாயிற்று. அடுத்து என்ன ? வலைப்பதிவை வெளியிட வேண்டும். அதற்கு publish என்ற பொத்தானை அழுத்துங்கள். அது கீழ்க்கண்ட பக்கத்தை கொண்டு வரும். இதற்கிடையில் உங்கள் இடுகையும் வெளியாகி விடும்.

இப்பொழுது “View Post” என்ற சுட்டியை சொடுக்கினால் உங்கள் வலைப்பதிவு தெரியும். உங்கள் புதிய இடுகையும் வலைப்பதிவில் தெரியும்.

அவ்வளவு தான் உங்கள் வலைப்பதிவின் முதல் இடுகை வெளியாகி விட்டது. நீங்களும் ஒரு வலைப்பதிவராகி விட்டீர்கள்.

சரி வலைப்பதிவு வெளியாகி விட்டது. ஆனால் யார் எனது வலைப்பதிவை படிப்பார்கள் ? நான் மட்டுமே படித்துக் கொண்டிருப்பதற்கு எதற்கு எழுத வேண்டும் என தோன்றுகிறதா ? அங்கே தான் தமிழ்மணம் (http://tamilmanam.net/) என்ற தளம் உங்களுக்கு உதவுகிறது.

வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு பல தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய திரட்டியான தமிழ்மணம் தமிழில் சுமார் 7000 (7 ஆயிரம்) வலைப்பதிவுகளை தினந்தோறும் திரட்டுகிறது. பல ஆயிரக்கணக்கான வாசர்களும், பதிவர்களும் தினந்தோறும் நல்ல கதைகளை/கவிதைகளை/கட்டுரைகளை வாசிக்க பல நாடுகளில் இருந்தும் தமிழ்மணத்தை நாடுகிறார்கள். எனவே உங்கள் வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதன் மூலம் பல நாடுகளில் உள்ள பல வாசகர்களை சென்றடைய முடியும்.

தமிழ்மணத்தில் என் வலைப்பதிவை இணைப்பது எப்படி ?

கீழே உள்ள சுட்டிக்கு சென்று ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும்
தமிழ்மணத்தில் சேர – http://www.tamilmanam.net/login/register.php

தமிழ்மணத்தில் உள்நுழைந்து ”தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகம்” சென்றால் உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க என்ற சுட்டி இருக்கும். அதன் மூலம் உங்கள் வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்ளலாம்

வாழ்த்துக்கள்…

வலைப்பதிவு சேவைகளும் எழுதுபொருட்களும்

வலைப்பதிவு சேவைகள்:

இன்றைக்கு நாம் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மின்னஞ்சல் முகவரியாவது வைத்திருக்கிறோம். பலருக்கு அலுவலக உபயோகத்துக்காக தங்கள் நிறுவனம் அளித்த மின்னஞ்சல் முகவரி இருந்தாலும், சொந்த உபயோகத்துக்கு இணையத்தில் இலவசமாய் கிடைக்கும் நிறைய மின்னஞ்சல் சேவைகளில் ஒரு பயனராகப் பதிந்து ஒரு முகவரியையையாவது பெற்றிருப்போம். ஹாட்மெயில், யாஹூ, ஜிமெயில், ரிடிஃப்மெயில் போன்றவை இந்த வகை இலவச மின்னஞ்சல் சேவைகளில் பிரபலமானவை.

இதே வகையில் வலைப்பதிவுகளையும் இலவச சேவைகளாக பல இணைத்தளங்கள் அளிக்கின்றன. சிறப்பான சேவை வேண்டுவோர் செலவு செய்து தங்களுக்கென்று தனிப்பட்ட வழங்கி(server)யில் பிரத்தியேகமான பல கூடுதல் வசதிகளையுடைய சேவைகளை அமைத்துக்கொண்டாலும், பெரும்பாலும் இந்த இலவச சேவைகளே ஒருவர் முதன்முதலில் வலைப்பதிவு செய்ய ஏற்றவையாக இருக்கின்றன. இவற்றில் முக்கியமான சில சேவையளிப்போரைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

‘அதெல்லாம் சரி, எதற்கு இவர்கள் நமக்கு இலவசமாக அளிக்கிறார்கள்? எங்கிருந்து இவர்களுக்குப் பணம் வருகிறது?’ என்று கேட்கிறீர்களா.. நம் வலைப்பதிவுத் திரையில் விளம்பரங்களை காட்டுவதன் மூலம் இவர்கள் தங்கள் செலவுகளை ஈடுகட்டுகிறார்கள், மேலும் சம்பாதிக்கிறார்கள். மின்னஞ்சல் வசதியிலும் விளம்பரங்கள் இடையில் சொருகப்பட்டு வருவதைப் பார்த்திருக்கிறோமே!


ப்லாக்கர்.காம் (http://www.blogger.com)

இருக்கும் சேவைகளிலேயே மிகவும் விரும்பப்படுவது இதுதான். எளிய அமைப்புக்களுடன், அதே சமயம் தேவையான பல வசதிகளுடன் வருகிறது. நாம் அனைவரும் நன்கு அறிந்ததும், இணையத்தில் நெறிமுறைகள், சுதந்திரம், திறன், வேகம் ஆகிய அனைத்து அம்சங்களுக்காகவும் மதிக்கப்படுவதுமாகிய கூகிள் (google.com) தேடுபொறி நிறுவனம் அளிப்பது இது. எனவே நீண்ட நாள் நம்பகத்தன்மையுடன் இயங்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. நான் உள்பட பலரும் முதலில் வேறு சேவைகளை பாவித்து, பிறகு பல அம்சங்களில் இந்த ப்லாக்கர்.காம் சேவையின் அனுகூலங்களைப் புரிந்துகொண்டு, தங்கள் வலைப்பதிவை இந்த சேவைக்கு மாற்றி இருப்பதே இதன் முதன்மைத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தத்தொடரில் என்னுடன் கைகோர்த்து, நீங்கள் செய்துகொள்ளப் போகும் உங்கள் முதல் வலைப்பதிவுக்கு இதே சேவையைத்தான் பாவிக்கப் போகிறோம்.


Wordpress

Wordpress

வேர்ட்பிரஸ்.காம் (http://wordpress.com/)

ப்லாக்கர்.காம்-ஐ விடவும் இன்னும் கூடுதல் வசதிகள் பல தரும் இந்த சேவையும் சிறப்பாகவே வேலைசெய்கிறது. ஆனால் உங்கள் வலைப்பதிவின் HTML ஐ மாற்றும் வசதியை வேர்ட்பிரஸ்.காம் வழங்குவதில்லை. இதனால் தமிழ்மணம் உள்ளிட்ட தளங்கள் வழங்கும் கருவிப்பட்டைகளை வேர்ட்பிரஸ்.காம் தளங்களில் இணைக்க முடியாது என்பது தான் வேர்ட்பிரஸ்.காம் சேவையில் இருக்கும் பின்னடைவு ஆகும்.


வேர்ட்பிரஸ்.ஆர்க் (http://wordpress.org/)

wordpress.org

wordpress.org

வேர்ட்பிரஸ்.காம் பார்த்தோம் ? அதற்கும் வேர்ட்பிரஸ்.ஆர்க் என்ற தளத்திற்கும் என்ன வேறுபாடு ? வேர்ட்பிரஸ்.காம் இயங்கும் மென்பொருளை திறவுமூலமாக (open source) வேர்ட்பிரஸ்.ஆர்க் தளம் வழங்குகிறது. சரி…என்ன வேறுபாடு ?

உங்களுக்கு என்று தனி இணையத்தளம் உருவாக்கி கொள்ள வேண்டுமா ? http://yourname.wordpress.com என்றோ http://yourname.blogspot.com என்றோ இருப்பது உங்களுக்கு உவப்பு இல்லாமல், உங்கள் பெயருடன் ஒரு தளம் வேண்டுமா ? உதாரணமாக http://vinavu.com என்ற தளம் ? இதற்கு வேர்ட்பிரஸ்.ஆர்க் மென்பொருள் பயன்படும். உங்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்தால் இதில் புகுந்து விளையாடலாம். வேர்ட்பிரஸ்.காம் சென்று மென்பொருளை தரவிறக்கி (download) உங்கள் தளத்தில் நிறுவி விட்டால் உங்கள் தளம் நீங்கள் சொன்னபடி கேட்கும்.  உங்களுக்கு நிரலி  (Program) எழுத தெரிந்தால் உங்கள் தளத்தை நீங்கள் விரும்பியபடி மாற்றலாம்.

வேர்ட்பிரஸ்.ஆர்க் மூலம் மட்டும் தான் வைத்து கொள்ள முடியுமா ? எனக்கு ப்ளாகர் பிடித்து இருக்கிறது ? அதில் வைத்துக் கொள்ள முடியாதா ?  முடியும். உதாரணமாக http://tamilsasi.com/ என்ற தளம் அவ்வாறு தான் இயங்குகிறது. உங்கள் ப்ளாகர் தளத்தில் இது குறித்த விபரங்கள் இருக்கும்.


இன்னும் பல வலைப்பதிவு சேவைகள் இருந்தாலும் ப்ளாகர்.காம், வேர்ட்பிரஸ்.காம், வேர்பிரஸ்.ஆர்க் மென்பொருள் போன்றவை தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எனவே புதிய வலைப்பதிவு தொடங்குபவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பது தான் நல்லது. பிற வலைப்பதிவு சேவைகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகள் ஆதரிப்பதில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்


இந்தத் தொடரைப் பொறுத்தவரை நாம் முதலில் சொன்ன ப்லாக்கர்.காம் சேவையை மட்டும் இனிமேல் கவனத்தில் கொள்வோம். ஒரு பரஸ்பர புரிதலுக்காகவும், ஒரு குறிப்பிட்ட சேவையை மட்டும் எடுத்துக்கொள்வதால் நம் நேரம் வீணாவதைத் தவிர்க்க இயலும். ஆனாலும், பெரும்பாலான செய்முறைகள் அமைப்புகள் எல்லா சேவைகளிலும் உள்ளவையே. எனவே, வேறு சேவைகளை விரும்புபவர்களுக்கும் இந்த தொடரில் காணும் விபரங்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.


அப்பாடா, ஒரு வழியாக, தியரி கிளாஸ் முடிந்தது; இனி பிராக்டிகலுக்குப் போவோமா?

இது வரை நாம் வலைப்பதிவுகளைப் பற்றி அறிதல் என்ற கட்டத்திலேயே இருந்தோம். இனி மேல்தான் நம் வலைப்பதிவு தொடங்குவதற்கான முதல் செயலில் இறங்கப் போகிறோம். அந்த முதல் செயல் தமிழில் எழுத ஏதுவான ஒரு கருவி. கருவி என்றதும் எங்கோ வாங்கிவந்து நம் கணினியில் இணைக்கப் போகிறோமோ என்று எண்ணவேண்டாம். இது மென்பொருள்(Software). எனவே இணையத்திலிருந்து நாமே இறக்கிக்கொண்டு நம் கணினியில் நிறுவிக்கொள்ளப் போகிறோம்.

உங்களில் பலர் ஏற்கனவே கணினியில் தமிழ் எழுதும் வசதியை ஏற்படுத்தியிருப்பீர்கள். சிலர் கணினியில் இதுவரை தமிழ் படித்ததோடு சரி, ஒரு வரிகூட எழுதியதில்லை என்னும் நிலையில் இருக்கலாம்.

நமக்கு தமிழ் எழுதத் துணையாக இன்று பல கருவிகள் உள்ளன. அழகி, முரசு அஞ்சல் என்னும் செயலிகள் (software programs). இ-கலப்பை, NHM Writer போன்ற தட்டச்சு செலுத்திகள் (keyboard driver). இணையத்திலேயே எழுதும் வசதியுள்ள கருவிகளான (Online tools) புதுவை – தமிழ் எழுதி, கூகுள் கருவி போன்றவைகள். இவ்வாறான பல மென்பொருட்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும்.

இவ்வாறான பல மென்பொருட்களில் பலராலும் அதிகம் பயன்படுத்தப்படுவது இ-கலப்பை என்பதால் நாம் அதை இறக்கி நிறுவிக்கொள்ளப் போகிறோம்.

ஏற்கனவே தமிழ் எழுதும் (தட்டச்சும், உள்ளிடும்..) வசதி வைத்து இருப்பவர்கள் இந்தப் படியை தாண்டிச் செல்லலாம். புதிதாய் வேண்டுபவர்கள் இதோ கீழே உள்ள சுட்டியிலிருந்து ‘இ-கலப்பை’யை இறக்கிக் கொள்ளுங்கள்.

http://code.google.com/p/ekalappai/downloads/list

இந்த இ-கலப்பை இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு எளிய மென்பொருள். மேலே கொடுக்கப்பட்ட சுட்டி, உங்களை இ-கலப்பை இறக்கிக்கொள்ள உதவும் ஒரு பக்கத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தமிழ் தட்டச்சுக்கு முற்றிலும் புதியவர் என்றால் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே தமிழ் தட்டச்சு செய்யும் Phonetic முறையில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக ஆங்கிலத்தில் thamiz என்று தட்டச்சு செய்தால் ”தமிழ்” என்று இ-கலப்பை தமிழில் மாற்றி கொடுக்கும்.

என்ன மிகவும் எளிதாக உள்ளதா ? தமிழ் தட்டச்சு செய்வது மிகவும் எளிமையானதே. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் தட்டச்சு பழக்கம். பழக பழக வேகமாக சில மணி நேரங்களில் ஒரு சிறுகதையையோ, குறுநாவலையோ, கட்டுரையோ எழுதி விட முடியும்.

இ-கலப்பை செயல்படும் விதம்

இ-கலப்பை நிறுவியபின் உங்களுக்கு மூன்று வகையான விருப்பங்களை இது அளிக்கிறது. alt+2 தட்டினால் நமக்கு வலைப்பதிவுகளுக்கு பயனாகக் கூடிய யுனிகோடு (unicode) என்ற வகைக் குறியேற்றம் (encoding) தெரிவு செய்யப்படுகிறது. alt+3 தட்டினால் திஸ்கி (TSCII) என்ற தகுதரம் தெரிவு செய்யப்படுகிறது. ‘திஸ்கி’ ஒரு பழைய (Legacy) குறியேற்றம். திஸ்கி தற்பொழுது அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் இ-கலப்பை மேம்படுத்தப்படும் பொழுது ’திஸ்கி’ விலக்கப்படக்கூடும். எனவே நாம் யுனிகோடு முறையையே அதிகம் பாவிக்கலாம். alt+1 தட்டினால் பழையபடி ஆங்கில (ரோமன்) எழுத்துக்களுக்கு உங்கள் விசைப்பலகை திரும்பிவிடுகிறது. இதனால், மற்ற எந்த வேலைக்குப் பயன்படும் கணினியிலும் இந்த மென்பொருளை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த முடிகிறது. யுனிக்கோடு முறையைப் பாவிக்கவேண்டிய அவசியம் அதன் குறை-நிறைகளைப் பற்றி நிறையக் கருத்துக்கள் உள்ளன. இருப்பினும் யுனிகோடின் பொதுவான சில அனுகூலங்களை இங்கே குறிப்பிடலாம்:

கூகிள் போன்ற தேடும் பொறிகளில் தனித்துவத்துடன் தேடும்போது அகப்படும் வசதி. உதாரணமாய் ‘தமிழ்’ என்ற சொல்லை கூகுளில் தேடிப் பாருங்கள். தமிழ் சார்ந்த தளங்களை கொண்டு வந்து கொடுக்கும்.

இன்னொரு அனுகூலம், விண்டோஸ் இயங்குதளங்கள் வரும்போதே தமிழ் யுனிகோடு எழுத்துரு(font)வாவது தன்னுள்ளே அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் யுனிகோடில் அமைந்த இணையப் பக்கங்களை, அவை, தாம் இயங்க ஆரம்பித்த முதல் நொடியிலிருந்தே, எந்த மேலதிக மென்பொருளும் நிறுவப்படாமல் திரையில் காட்டும் திறன் படைத்துள்ளன.

ஆக, நீங்கள் இப்போது இ-கலப்பையை நிறுவி, எளிய உரை எழுதும் செயலியான நோட்பேட் (notepad) கொண்டு அதை சோதித்து வையுங்கள். மேலும் உங்கள் வலைப்பதிவுக்கு நல்லதாக ஒருபெயர், விளக்கம் போன்றவற்றையும் யோசித்து வையுங்கள். அடுத்த பாகத்தில் உங்கள் முதல் வலைப்பதிவு அரங்கேற.. இல்லை வலையேறப்போகிறது!

ஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்

முந்தைய கட்டுரைகளில் வலைப்பதிவு எதற்கு என்பதையும், வலைப்பதிவு சம்பந்தப்பட்ட சில முக்கியக் கேள்விகளுக்கு விடையையும் பார்த்தோம். வலைப்பதிவுகள் எப்படியெல்லாம் இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் சில சுட்டிகள் கொடுத்திருந்தோம், அவற்றிலும் சிலவாவது சென்று பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆக, வலைப்பதிக்கவேண்டும் என்று நீங்கள் தயாராகியிருப்பீர்கள்.

நமக்காக நாமே ஒரு வலைப்பதிவு உருவாக்கப் போகிறோம். அதன் முதல் படியாக வாசகர் பார்வையிலிருந்து ஒரு வலைப்பதிவின் முக்கியமான அம்சங்கள் என்னென்ன என்று காணலாம். பின்னால் நாம் சில பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசும்போது குழப்பம் எதுவும் வராமல் இருக்கவும் இந்த விளக்கம் அவசியம். இதோ ஒரு எளிமையான வலைப்பதிவின் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறிப்போமா?

கீழே உள்ள படத்தின் உள்ள எண்களின்மேல் அல்லது முக்கியப்பகுதிகளின்மேல் சொடுக்கினால் அதைப் பற்றிய விளக்கத்தை அறியலாம்.

இனி இந்தப் படத்தில் குறிக்கப்பட்ட ஒவ்வொரு பாகத்தின் தேவையையும் அவற்றின் விளக்கங்களையும் பார்க்கலாம். கூடவே ஆங்கிலப்பெயர்களையும் பயன்படுத்தலாம். இந்த வேலைகள் செய்யத்தேவையான ஆங்கில அறிவு கொஞ்சமே, அது இன்று தமிழறிவைவிட நம் மக்களிடம் அதிகமாகவே இருப்பதால், இது ஒரு பிரச்னையில்லை!


1. வலைப்பதிவின் பெயர் (Title):

ஒவ்வொரு வார இதழ், இணைய இதழ், புத்தகம் எல்லாவற்றையும் போல நம் வலைப்பதிவிற்கு இதுவே அடையாளம். சிலர் தன் பெயரிலேயே தன் வலைப்பதிவையும் வைத்திருக்கிறார்கள். சிலர் எண்ணங்கள், கிறுக்கல்கள், சிந்தனைகள் என்று வைக்கிறார்கள். நம் கற்பனைக்குதிரையை இங்கிருந்தே ஓட்ட ஆரம்பிக்கலாம். எதுவாக இருந்தாலும் நல்ல தமிழ்ப்பெயராக வைத்துக்கொள்ளுவது நல்லது. இது என் தனிப்பட்ட ஆலோசனை.

2. வலைப்பதிவைப்பற்றிய விபரம்(Description):

ஒரு வலைப்பதிவர் தன்னைப்பற்றி அல்லது இங்கு எதைப்பற்றியெல்லாம் எழுதப்படும் என்பது பற்றி இங்கு குறிக்கலாம். இது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பகுதி. அவரவர் விருப்பம் போல என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், புதிதாக வலைப்பதிவுக்கு வருகை தரும் ஒரு வாசகருக்கு இங்குதான் அந்த வலைப்பதிவைப்பற்றிய முதல் அபிப்ராயம், உருவம் கிடைக்கப் போகிறது. அது நல்லதாக, உண்மையாக, தெளிவாக இருக்கும்படி இருக்க வேண்டும். இது ஓரிரு சொற்றொடர்களில் இருத்தல் நலம்.

உதாரணங்கள்:

வினவு, வினை செய் !
விரிவெளித் தடங்கள்

மேலே கண்ட இரண்டும் ஒரு வலைப்பதிவின் முகப்பில் இருக்கும் நிலையான அம்சங்கள். இது போல இன்னும் இரு நிலையான பகுதிகள் பொதுவாக ஒரு வலைப்பதிவில் காணப்படும். அவை என்ன என்று அடுத்துக் காண்போம்.


3. முந்தையவை (Archives):

நாம் முன்னமே பார்த்ததுபோல, ஒரு வலைப்பதிவு தொடர்ந்து புதிய எழுத்துக்களால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கப்படும் ஒன்றுதானே. எனவே முகப்புப் பக்கத்திலேயே இதுவரை ஒருவர் எழுதிய அனைத்தையும் காட்டினால் எப்படி இருக்கும்? பார்ப்பவர்கள் இது என்னடா சோதனை என்று எண்ண மாட்டார்களா? உதாரணமாக ஒரு ஐம்பது விஷயங்களை ஒருவர் இதுவரை எழுதியிருந்தால் அந்த ஐம்பதும் முன்பக்கத்தில் காட்டப்படுவதில்லை. கடைசியாக எழுதப்பட்ட விஷயம் முதலில் வரும்படிதான் பொதுவாக வலைப்பதிவுகள் அமைக்கப்பட்டிருக்கும். அத்தோடு முகப்புப் பக்கத்தில் எத்தனை விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதை நாம் வலைப்பதிவின் அமைப்பு விவரங்களை மேலாண்மை செய்யும்போது வரையறுத்துவிடலாம்.

இப்படி வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை விஷயங்கள் தவிர, அதற்குமுன் எழுதப்பட்டவற்றை தானாகவே வாரவாரியாகவோ, மாதவாரியாகவோ கோர்த்து, அவற்றைத் தனியான வலைப்பக்கங்களாக்கி, அவற்றுக்கு சுட்டிகளும் கொடுக்கப்பட்டிருக்கும். யார் இதையெல்லாம் பொறுமையாகச் செய்வது? அந்தக் கவலையே நமக்கு வேண்டாம். எல்லாவற்றையும் வலைப்பதிவுச்சேவையே பார்த்துக்கொள்ளூம். இதுவும் வலைப்பதிவை வலைத்தளங்களிலிருந்து வேறுபடுத்தும் பல அம்சங்களில் ஒன்று.


4. இணைப்புகள் (Links):

அடுத்த முக்கியமான பாகம் இது. ஒவ்வொரு வலைப்பதிவும் தனித்து சுயேச்சையாய் இயங்குவதில்லை. இணையமே ஒரு மிகப்பெரும் கூட்டுறவு அமைப்புத்தானே. அதே கருத்தில் ஒவ்வொரு வலைப்பதிவரும், தங்களுக்கு விருப்பமான, தங்கள் வாசகருக்குப் பயனாகக்கூடிய வேறு இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் ஆகியவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது வழக்கம். இது முழுக்க முழுக்க ஒருவலைப்பதிவரின் விருப்பமே. நம் நண்பர்களின் வலைப்பதிவுகள், தமிழ் மென்பொருள்/எழுத்து உதவி சம்பந்தமான தளங்கள், வலைப்பதிவுகளின் சஞ்சிகை, பட்டியல் போன்றவற்றிற்கு இணைப்புக் கொடுப்பது நல்லது.

இதுவரை பார்த்தவை ஒரு வலைப்பதிவின் நிலையான அம்சங்கள். இனி வரப்போவது மாறும் அம்சங்கள்.


5. இடுகை (Post or Entry):

இதுதான் ஒருவர் எழுதிக்குவிப்பது. ஒவ்வொரு முறையும் அவர் எழுதிப் பதிப்பிக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு இடுகை (இடப்படுவது, one that is posted) எனலாம். சாதாரணமாக ஒரு இடுகை ஒரு வரியிலிருந்து, சில 100 வரிகள் வரை இருக்கலாம். தினமும், அல்லது சில நாட்களுக்கு ஒருமுறை இடப்படுவதாயின், 100 வரிகளுக்கும் மிகாமல் இருந்தால் வாசிப்பவர்களுக்கு ஆர்வக்குறைவில்லாமல் இருக்கும். இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அவரவர் விரும்பியதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பதிப்பிப்பதுதானே வலைப்பதிவின் மையக்குறிக்கோள், எனவே இதன் நீளம் நம் விருப்பம். இடுகைகள் வெறும் கட்டுரைகளாக இல்லாமல், சுட்டிகள், படங்கள், பட்டியல்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்தாலே இணையத் தொழில்நுட்பத்தின் முழுவீச்சினையும் பயன்படுத்தியதாக ஆகும். இவை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை, பின் வரும் பாகங்களில் விளக்கமாகப் பார்க்கலாம்.


6. இடுகையின் தலைப்பு (Title of the Post):

இதைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வோரு இடுகைக்கும் ஒரு அர்த்தமுள்ள தலைப்பிடுவது, வாசிப்பவருக்கு மிகவும் பயனுள்ளது. தங்கள் நேரத்தை ஒருவர் செலவிடும் முன் அது தேவைதானா என்பதை இதை வைத்து முடிவுசெய்ய முடியும். சில விசேட குறிக்கோள்களுடன் இயங்கும் வலைப்பதிவுகள், தலைப்பில்லா இடுகைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் அது அவ்வளவு விரும்பத் தகுந்ததல்ல.


7. இட்டவர் பெயர், மற்றும் நேர முத்திரை? (author and Time-stamp)):

பலரும் எழுதும் கூட்டு வலைப்பதிவுகளில் இந்த விபரங்கள் முக்கியமாகத் தேவை. ஒருவர் மட்டும் எழுதும் வலைப்பதிவுகளில் யாரால் எழுதப்பட்டது என்பது பெரிய தகவல் அல்ல. ஒரு நாளைக்குப் பலமுறை எழுதப்படும் வலைப்பதிவுகளில் ஒவ்வொரு இடுகையும் எந்த நேரத்தில் இடப்பட்டது என்பதைக்குறிக்கும் நேரமுத்திரை முக்கியமானது. மற்றபடி இந்தத்தகவல்கள் பெரிய முக்கியத்துவம் இல்லாதவையே. ஆனாலும் பெரும்பாலான வலைப்பதிவு சேவைகள், இந்த விவரத்தையும் தானாகவே காட்டும்படி அமைக்கப்பட்டே வருகின்றன.


8. நாள் முத்திரை (Date-line):

இதுவும் தானாகவே அமைக்கப்பட்டிருக்கும். ஒரே நாளில் பல இடுகைகள் இருந்தால் அவையனைத்தும் இந்த நாள் முத்திரைக்குக் கீழ் காட்டப்படும். ஒரு இடுகை என்று எழுதப்பட்டது என்ற விவரம் பலசமயம் முக்கியமான ஒன்று. அதிலும் தினமும் புதுப்புது விஷயங்களை எழுதும்போது, பல நாள் கழித்துப் பார்த்தால் அது என்று எழுதப்பட்டது என்பதை வைத்து அன்று நம் எண்ண ஓட்டம் எப்படி இருந்தது என்று அறியவும் இது பயனாகிறது.


9. நிலையான சுட்டி (Permalink):

ஒருவர் தம் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஒரு விஷயத்தை இன்னொருவருக்குச் சுட்ட விரும்புகிறார் எனக் கொள்வோம். அவர் வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் அந்த விஷயத்தைப் படித்து, அதே முகப்புப் பக்கத்தின் உரலை (URL) மின்னஞ்சல்மூலம் அனுப்புகிறார். அதைப் பெறுபவர், அந்த உரலை தன் உலாவியில் இட்டால் அதே பக்கம் அவரது கணினித்திரையிலும் தெரிகிறது. ஆனால் நாம் ஏற்கனவே கண்டபடி இன்று முகப்புப் பக்கத்தில் இருப்பது சில நாள் கழித்து ‘முந்தைய’ பக்கங்களில் ஏற்றப்பட்டுவிடும். புதிதாய் இடப்பட்டவை முகப்புப் பக்கத்தில் இருக்கும். எனவே அவர் தேடியது கிடைக்காமல் போகுமல்லவா? இந்தப் பிரச்னைக்கு விடைதான் இந்தப் புத்தக்கக்குறி. ஒவ்வொரு இடுகைக்கும், வலைப்பதிவுசேவையே ஒரு நிலையான உரலை அளிக்கும். அந்த உரல் வேண்டுவோர் இந்த புத்தக்ககுறியைச் சொடுக்கினால், உலாவியின் முகவரிக் கட்டத்தில் இப்போது முழு உரலும் தெரியும். இதை நகலெடுத்து இன்னொருவருக்கு அனுப்பினால், எத்தனை மாதங்கள் கழித்தும் அந்தக் குறிப்பிட்ட இடுகையை எட்டமுடியும்.

பெரும்பாலும் இது # குறியால் குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் நாம் பிறகு நம் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.


10. மறுமொழிகள் (அல்லது) பின்னூட்டங்கள் (Comments):

வலைப்பதிவின் இன்னொரு முக்கிய அம்சம், வாசிப்பவர் தன் கருத்தை உடனுக்குடன் பதிக்கும் வசதி. இது யாருடைய ஈடுபாடும் தேவையின்றி தானாக நடக்கும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். வழக்கமாக இதுவரை எத்தனை மறுமொழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன என்ற விவரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இங்கே இருக்கும். அதைச் சொடுக்கினால், அது இருக்கும் மறுமொழிகளை காட்டவும், மேலும் மறுமொழிகள் இடவும் வசதியுள்ள சன்னலுக்கு அழைத்துச் செல்லும். மேலதிகமாக நிறைய வசதிகள் செய்ய தேவையும் வாய்ப்பும் உள்ள இடம் இந்த மறுமொழிப் பெட்டி. அதை பின் வரும் பாகங்களில் விபரமாகக் காணலாம்.


அப்பாடா, ஒரு வறட்சியான கட்டத்தைத் தாண்டிவிட்டோம். ஆனால் இந்த விஷயங்களைப் பற்றி நம்மிடம் தெளிவு இல்லையென்றால் மேற்கொண்டு நாம் செய்யப்போகும் வேலைகளில் காலமும், உழைப்பும் வீணாகிவிடும், எனவே ஒருமுறைக்கு இருமுறை இவற்றைப் படித்து தெளிந்துகொள்வோம்.

இன்னொன்றையும் சொல்லலாம், மேலே கண்ட அமைப்புகள் ஒரு எளிமையான வலைப்பதிவின் அடையாளங்கள். இவற்றில் எதுவும் குறைந்தும் இருக்கலாம், அல்லது இன்னும் மேலதிகமாக வாக்குப்பெட்டி, அரட்டைப்பெட்டி, போன்ற பல கூடுதல் வசதிகளும் இருக்குமாறும் அமைக்கலாம். எல்லாமே அவரவர் விருப்பத்தைம், திறமையையும் பொறுத்தது.

அடுத்த பாகத்தில் இலவசமாகக் கிடைக்கும் வலைப்பதிவு சேவைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, தமிழில் எழுதத் தேவையான அடிப்படை மென்பொருட்கள் பற்றியும் காணலாம்.

வலைப்பதிவுகள் – சில கேள்விகள்

சிலர் சொந்தமாக வலைப்பக்கம் வைத்திருக்கிறார்களே, அதற்கும் வலைப்பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?


ஓரளவுக்கு கணினி அறிவு வேண்டும் என்றால், எந்த அளவுக்கு?

(இந்தப் படத்தில் காணப்படும் பெண் படம் ஒரு குறியீடு மட்டுமே. இதுவே ஆணுக்கும் பொருந்தும். எனவே பெண்களே கோபப்படவேண்டாம், இந்தப் படம் வெறும் நகைச்சுவைக்காக )

இணையத்தில் உலாவுவதற்கு நமக்கெல்லாம் தெரியும். எழுத்தை வாசிக்கத் தெரிந்த எவரும், சில நிமிடப் பழக்கத்திலேயே இதைக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள். இந்த இணையப் பக்கத்தை வாசித்துக்கொண்டிருப்பதே அத்தகைய ஒரு அறிவுநிலை. இதற்கு அடுத்த நிலையாக மின்னஞ்சல் கையாளுவதைச் சொல்லலாமா? இணையத்தில் உலாவத்தெரிந்த அனைவருமே இன்னும் சிறிது பழகிக்கொண்டு மின்னஞ்சல் சேவையைக் கையாளுகிறோம் அல்லவா? அதற்கு அடுத்த நிலையாக வலைப்பதிவைச் சொல்லலாம், அவ்வளவுதான். மேலதிகமாய் இன்னும் ஓரிரு புதிய விஷயங்களைப் புரிந்து கையாள ஆரம்பித்தால் வலைப்பதிவு நம் வசத்தில்.

இணையத்தில் சில நாட்களாகவாது மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தியிருந்தால் வலைப்பதிவுக்குத் தேவையான அறிவு உங்களுக்குத் இருக்கிறதென்று பொருள்.


தமிழில் தாளில் எழுதத் தெரியும். தட்டச்சு செய்யத் தெரியாது, அப்படியே தெரிந்தாலும் தமிழ் கீபோர்ட், சாப்ட்வேர் எல்லாம் வேண்டுமே எங்கே போவது?

தட்டச்சு என்பதை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு முழுநேர எழுத்தாளர் ஒரு நாளைக்கு ஒரு ஐம்பது பக்கம் எழுதலாம். ஒரு அலுவலகத் தட்டச்சர் ஒரு நாளைக்கு இருபது கடிதங்களை தட்டச்சு செய்யலாம். ஆனால் ஒரு வலைப்பதிவர் மிஞ்சிப்போனால் ஒரு பக்கம், இரண்டு பக்கம் செய்யவேண்டியிருக்கலாம். இதற்கு பெரிய தட்டச்சுத் ‘திறமை’ வேண்டியதில்லை.

மின்னஞ்சல் கையாளும் நாம் அனைவரும் அறிந்த ஒரு அடிப்படை உண்மை, மின் வடிவங்களில் இருக்கும் ‘திருத்தி எழுதும்’ வசதி. ஒரு தட்டச்சு இயந்திரத்தில் இருப்பதைப்போல அடித்த எழுத்தை ரப்பரைக் கொண்டு அழிப்பதில்லை நாம். அதே வழியில், தமிழில் கணினிமூலம் எழுதும்போதும் கண்முன்னே தவறு தெரிந்தால் திருத்தி அடித்துக்கொள்ளப் போகிறோம், இது என்ன தலையெழுத்தா மாற்ற முடியாமல் போவதற்கு? தமிழார்வமும், கணினி நுட்பமும் அறிந்த ஆர்வலர்கள் பலர் நமக்காக, தேவையான எல்லா மென்பொருட்களையும் இலவசமாக அளிக்கிறார்கள். நம் ஆர்வமும், ஈடுபாடுமே அவர்களின் உழைப்புக்கு நாம் செய்யும் மரியாதை. எங்கு இவை கிடைக்கின்றன, எப்படி இவற்றை நிறுவி இயக்குவது என்பதை அடுத்து பார்க்கலாம்.


சரி, நான் தேவையான சாப்ட்வேரெல்லாம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து பயன்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். என் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் தமிழ் எழுத்து சரியாய்த் தெரியுமா? இப்போதே ஒரு சில பத்திரிகைகள் படிக்க முடிவதில்லை. நிறைய ஃபான்ட் தொல்லைகள். இதுக்கு என்ன செய்வது?

அதற்கும் இப்போது வழி கிடைத்துவிட்டது. ஆங்கிலம் மட்டும் புழங்கிவந்த காலத்தில் கணினியில் தமிழைக் கொண்டுவர படாதபாடு பட்டிருக்கிறார்கள் நம் முன்னோடிகள். ஆனால் இன்றைக்கு எல்லா இடங்களிலும் தரப்படுத்துதல் வந்துவிட்டது. ஆங்கிலத்துக்கு வெளியே கணினிப் பயன்பாட்டை விரிவாக்கவேண்டிய தேவையை உணர்ந்த பல கணினியியல் அமைப்புக்கள் பல மொழிகளுக்கும் எழுத்துருக்களை தரப்படுத்தியுள்ளன. யுனிகோடு என்றழைக்கப்படும் இந்த தரநிர்ணயத்தில் அமைந்த பன்மொழி எழுத்துருக்கள் இன்று பல இயங்குதளங்களிலும் (ஆபரேடிங் சிஸ்டம்ஸ்) நிறுவும்போதே அல்லது வாங்கும்போதே அமைக்கப்பட்டு வருகின்றன. கொஞ்சம் பழைய இயங்குதளங்களானால் இவற்றை மேலதிக வசதிகளாக நிறுவிக்கொள்ளவும் முடிகிறது.

இதே யுனிகோடு மூலமாகத்தான் தற்பொழுது இணையத்தில் பல தமிழ் தளங்கள் இயங்கி வருகின்றன.


என்னென்னவெல்லாம் எழுதலாம்? இலக்கியமெல்லாம் எனக்கு வராதே…”

என்னவெல்லாம் நம்மைப் பாதிக்கிறதோ, என்னவெல்லாம் நம் உள்ளத்துக்கு வெளியே கொட்ட விரும்புகிறோமோ, என்னவெல்லாம் பகிர்ந்துகொண்டால் நமக்கும், வாசிப்பவருக்கும் சிறு பயனாவது இருக்குமோ, அதை எல்லாம் எழுதலாம். ஒருவர் தாம் சார்ந்த துறையைப் பற்றி எழுதலாம். தம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி, அதில் தாம் பெற்ற அனுபவங்களைப் பற்றி எழுதலாம். நம் ஊரில் தேர்தல் நடக்கிறது. சுவாரசியமான பேச்சுக்களைப்பற்றி, அவை நமக்குள் எழுப்பும் கேள்விகளைப் பற்றி, எழுதலாம். நேற்றுப் பார்த்த சினிமாவைப் பற்றி, இன்று தொலைக்காட்சியில் கண்ட கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி எழுதலாம்.

நமக்கு இலக்கிய ஆர்வம் இருப்பின் கவிதைகளை, கதைகளை எழுதி, மற்றவர்கள் விமரிசனத்துக்கு விட ஒரு வாய்ப்பாகக் கொள்ளலாம். அறிவியல், தொழில்நுட்பம் பற்றி எழுதலாம். அவ்வளவு ஏன், சுவையான ஒரு சமையல் குறிப்பு கூட, நம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இதில் பதித்து, அதன் சுட்டியை மின்னஞ்சலில் அனுப்பலாம். இன்னதுதான் எழுதலாம் என்ற எல்லை இல்லாத ஒரு ஊடகம், வலைப்பதிவைப்போல இன்னொன்று கிடைக்குமா என்பது பெரிய கேள்விக்குறி.


எனக்கு நான் சொல்ல நினைப்பதை எங்கேயாவது கொட்டிவிடவேண்டும் என்று ஆசை, ஆனால் என் பெயர் வெளியே தெரியக்கூடாது, இதுக்கு இதில் வழி இருக்கா?

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? உங்களுக்கு வலைப்பதிவு ஒரு வரப்பிரசாதமுங்க! புனைபெயரில் எழுதுங்க, முகமூடிபோட்டுக்குங்க, ஒரு பயலும் டச் பண்ணமுடியாது. முக்கியமாக விமரிசனக் கட்டுரை எழுத விருப்பம் உள்ளவர்கள் வலைப்பதிவின் மூலம், விருப்பு வெறுப்பற்ற வகையில் எழுதலாம்.


சரி, நான் பாட்டுக்கு எழுதித்தள்ளுகிறேன், இதை யாராவது படிக்கிறாங்களான்னு எப்படித்தெரிஞ்சுக்கிறது?

கவலையே படாதீர்கள்! இன்றைக்கு இணையத்தொழில்நுட்பம் தரும் பலவேறு பரிசுகளில் இம்மாதிரி தகவல்களும் அடக்கம். கொஞ்சம் முயற்சித்தால், எத்தனை பேர் படிக்கிறார்கள், எந்தக் கட்டுரையை நிறையப்பேர் படித்தார்கள், என்பதுபோல பலப்பல புள்ளிவிவரங்கள் நமக்குக் கிடைக்கும். எனவே நம் பிரபலத்தை நாமே அளந்துகொள்ளலாம்.


படிக்கிறவர்கள், தான் என்ன நினைக்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லமுடியுமா?

அதுதானே வலைப்பதிவின் மிக முக்கியமான பலமே. ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனியாக மறுமொழி வசதி கொடுக்கமுடியும். அதன்மூலம் ஒரு பொருளைப் பற்றிய வாசிப்பவர்களின் கருத்துக்களை சுடச்சுட அங்கேயே பதிக்க வசதி கிடைக்கிறது. இவ்வாறு ஒருவர் சொல்லும் மறுமொழியை அடுத்து வாசிப்பவர் பார்க்கக் கிடைப்பதன் மூலம் அவரும் இந்தத் தொடர் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கெடுக்கத் தூண்டுதலாகிறது. பலமுறை முதலில் எழுதப்பட்ட கட்டுரையைவிடவும் இந்த மறுமொழிச் சங்கிலிகள் சுவையாகவும் பயனுள்ளதாகவும் அமைவதைப் பார்க்கமுடிகிறது.


இதற்கு என்ன செலவாகும்?

செலவா? என்ன செலவு செய்ய நீங்கள் தயார்? பயந்துவிட வேண்டாம். பணச்செலவு என்று நீங்கள் செய்வது பூஜ்ஜியம். உங்கள் உழைப்பும், ஆர்வமும் மட்டுமே நீங்கள் செலவுசெய்ய வேண்டியவை. இதில் ஆழ்ந்துபோய் எக்கச்சக்கமாய் செய்யவேண்டும் என்று விரும்புபவர்கள் சிலசமயம் மேலதிக வசதிகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண வலைப்பதிவர் ஒரு பைசா செலவு செய்ய வேண்டியதில்லை. நம்புங்கள்!


என் எழுத்துக்களை யாரும் காப்பி அடித்துவிட்டால்?

இணையத்தில் பதிப்பிக்கப்படும் எதுவும் யாரும் எளிதில் காப்பியடிக்க ஏதுவானதுதான். எனவே இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியும். காப்பியடிக்கும் அளவுக்கு நாம் எழுதுகிறோமா என்று தெரிந்துகொள்ளவாவது இது பயன்படட்டுமே. அப்படி நம் எழுத்தின் மகிமை இருந்தால், நாமே வணிக ரீதியில் அவற்றைப் பதிப்பிக்கலாம். வார இதழ்களுக்கு எழுதலாம், சன்மானம் பெறலாம்.


இப்படிப் பதிப்பிப்பதால் எனக்கு எதாவது வருமானம் கிடைக்க வாய்ப்பு?

அதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கூகுல் விளம்பரங்கள் மூலமாக நம் வலைப்பதிவில் வருமானம் ஈட்ட முடியும். நம் எழுத்து உண்மையிலேயே பலரை ஈர்க்கும் ஒன்றாக இருந்தால், நம் வலைப்பதிவில் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டலாம்.


இப்படி எழுதுவதால் எனக்கு ஏதும் தொல்லைகள் வருமோ?

மனதுக்குள் எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். டைரியில் என்ன வேண்டுமானாலும் எழுதிவைக்கலாம். ஆனால் ஒன்றைப் பொதுவில் வைக்கும்போது, அதற்கு முழுப்பொறுப்பு அதை எழுதியவருக்கு வந்துவிடுகிறது. எனவே இதைப் புரிந்து எதைத் தவிர்க்கவேண்டுமோ அதைத் தவிர்த்துவிட்டால் எந்தத் தொல்லையும் இல்லை. அதையும் மீறி பயமாக இருந்தாலோ, அல்லது சர்ச்சைக்குரிய ஒன்றை எழுதியே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டாலோ இருக்கவே இருக்கிறது புனைபெயர், முகமூடி, இத்யாதி.


என்ன நண்பர்களே ஐயங்கள் தெளிந்தனவா? இனி ‘உங்களுக்கே உங்களுக்காக’ ஒரு வலைப்பதிவை செய்யலாமா? அடுத்த கட்டுரையில் ஒரு வலைப்பதிவை எப்படி தொடங்குவது என்பது குறித்து பார்க்கலாம்

வலைப்பதிவுகள் – ஒரு அறிமுகம்

ஒவ்வொரு நாளும் கணினியின் உபயோகம் பரவலாகிக் கொண்டே வருவதைப் பார்க்கிறோம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாக இணையம் திகழ்கிறது. தொடக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே கோலோச்சிவந்த இந்த ஊடகத்தில் இன்று அழகுத் தமிழில் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள், சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் இணையத்தின் வாயிலாக நம் திரைக்கு வந்து நம் வாசிப்புக்குத் தீனி போடுகின்றன. அதிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன.

அடுத்து, ‘வாசிப்பதெல்லாம் சரி, இது ஒரு வழிப்பாதையாக இருக்கிறதே, வாசிப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்குமா?’ என்றும் தேடுகிறோம். அந்த வாய்ப்பை தான் வலைப்பதிவுகள் தருகின்றன.

‘என் கவிதையையோ கதையையோ பதிப்பிக்க ஏற்றதா என்பதை எப்படி ஒரு துணை ஆசிரியரோ, உதவியாளரோ தீர்மானிக்க முடியும்? வேண்டும் ஜனநாயகம்! படிப்பவர்கள் சொல்லட்டும், அது படிக்கத் தகுதியானதுதானா என்று’ என்பதுபோல நமக்குள் எண்ணங்கள் எழும்புவதும் இயற்கை. காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு என்னும்போது, நம் எழுத்து நமக்கு காவியம்தான், சத்தியவாக்குதான்.

இதன் இன்னொரு பக்கமும் இருக்கிறது. எழுதுபவர் எண்ணிக்கை அதிகமாகும்போது, யார் இந்தப் படைப்புகளை சேகரிப்பது, தரம் பிரிப்பது, மின் வடிவத்தில் இணையத்தில் ஏற்றுவது, இதற்கெல்லாம் பொறுப்பேற்பது? ஐந்து கட்டுரைகளுடனும் வரும் ஒரு இதழில் ஐம்பது கட்டுரைகள் பதிப்பிக்கமுடியுமா?

இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான், தன் படைப்புகளை தானே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் ப்லாக்கிங் (Blogging) என்றழைக்கப்படும் வலைப்பதித்தல் இன்று தமிழிலும் எளிதில் செய்ய முடிகிறது. உலகம் முழுவதிலும் இன்றைக்கு சுமார் 40 லட்சம் ப்லாக்ஸ் ( இனி நாம் வலைப்பதிவுகள் என்று அழைப்போம்) இருக்கலாம் என்று ஒரு செய்தி சொல்கிறது. இப்போதைக்கு தமிழில் சுமார் 7000 வலைப்பதிவுகள் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழில் தம் எண்ணங்களை, படைப்புகளைப் பதிக்க ஆர்வமுள்ள ஒருவர், எந்தப் பெரிய கணினித் தொழில்நுட்ப அறிவும் தேவைப்படாமல், எந்த செலவும் செய்யாமல் இதைச் செய்ய முடியும். ஆர்வமும் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்.

உங்கள் எழுத்துக்களை மின்குதிரை மேலேற்றி உலகம் முழுமைக்கும் கொண்டுசெல்லத் தயாராகிவிட்டீர்களா? வாருங்கள், மிக அடிப்படையான கணினி அறிவு, இணையத்தொடர்பு வசதி இவை இரண்டும் மட்டும் உங்களிடம் இருக்குமானால், எப்படி உங்கள் எழுத்துக்களை, எண்ணங்களை பொன்னெழுத்துக்களால் பதிக்க முடியாவிட்டாலும், மின்னெழுத்துக்களால் பதிக்கலாம் என்பதை இங்கு எளிய விளக்கங்களுடன் தெரிந்துகொள்ளலாம்.

இன்னேரம் உங்களுக்குள் சில கேள்விகள் தோன்றியிருக்கவேண்டுமே. இதோ உங்கள் மனதில் கிளம்ப வாய்ப்பிருக்கக்கூடிய கேள்விகளில் சில:

  • சிலர் சொந்தமாக வலைப்பக்கம் (homepage) வைத்திருக்கிறார்களே, அதற்கும் வலைப்பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?
  • ஓரளவுக்கு கணினி அறிவு வேண்டும் என்றால், எந்த அளவுக்கு?
  • தமிழில் தாளில் எழுதத் தெரியும். தட்டச்சு செய்யத்தெரியாது, அப்படியே தெரிந்தாலும் தமிழ் கீபோர்ட், சாப்ட்வேர் எல்லாம் வேண்டுமே எங்கே போவது?
  • சரி, நான் தேவையான சாப்ட்வேரெல்லாம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து பயன்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். என் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் தமிழ் எழுத்து சரியாய்த் தெரியுமா? இப்போதே ஒரு சில பத்திரிகைகள் படிக்க முடிவதில்லை. நிறைய பான்ட் தொல்லைகள். இதுக்கு என்ன செய்வது?
  • என்னென்னவெல்லாம் எழுதலாம்? இலக்கியமெல்லாம் எனக்கு வராதே…
  • எனக்கு நான் சொல்ல நினைப்பதை எங்கேயாவது கொட்டிவிடவேண்டும் என்று ஆசை, ஆனால் என் பெயர் வெளியே தெரியக்கூடாது, அதுக்கு இதில் வழி இருக்கா?
  • சரி, நான் பாட்டுக்கு எழுதித்தள்ளுகிறேன், அதை யாராவது படிக்கிறாங்களான்னு எப்படித்தெரிஞ்சுக்கிறது?
  • படிக்கிறவர்கள், தான் என்ன நினைக்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லமுடியுமா?
  • இதற்கு என்ன செலவாகும்?
  • என் எழுத்துக்களை யாரும் காப்பியடித்துவிட்டால்?
  • இப்படிப் பதிப்பிப்பதால் எனக்கு எதாவது வருமானம் கிடைக்க வாய்ப்பு?
  • இப்படி எழுதுவதால் எனக்கு ஏதும் தொல்லைகள் வருமோ?

இதற்கெல்லாம் விடை தெரிந்துகொள்ளும் முன் தமிழில் உள்ள வலைப்பதிவுகள் சிலவற்றை நீங்கள் பாருங்கள். இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. எனவே இவற்றை எவ்விதத்திலும் உங்கள் கற்பனைக்கோ ஆர்வத்துக்கோ எல்லையாகக் கொள்ளவேண்டியதில்லை. ஒரு புரிதலுக்காக மட்டுமே.

இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பதிவுகளைப் பார்க்கலாம்:

http://djthamilan.blogspot.com
http://tamilnathy.blogspot.com
http://jyovramsundar.blogspot.com
http://naayakan.blogspot.com

அரசியல், சமூகம் குறித்த கருத்துகளுக்கு சில மாதிரிகள்

http://www.vinavu.com/
http://tamilsasi.com/

பல்சுவை பதிவுகளுக்கு:

http://asifmeeran.blogspot.com
http://truetamilans.blogspot.com

திரைப்படம், திரைப்பட விமர்சனம் குறித்த பதிவுகளுக்கு

http://pitchaipathiram.blogspot.com
http://jackiesekar.blogspot.com
http://cablesankar.blogspot.com
http://www.hollywoodbala.com

பங்குச்சந்தை, அறிவியல், தொழில்நுட்பம், கணினி மென்பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு:

http://fuelcellintamil.blogspot.com
http://panguvaniham.wordpress.com
http://tamilgnu.blogspot.com

மருத்துவம் குறித்த தகவல்களுக்கு

மருத்துவர் புருனோவின் http://www.payanangal.in/

இவ்வாறு சுமார் 7000 வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. என்ன உடனே ஒரு வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறதா ?

இப்பொழுது மேலே நாம் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடைகளை தேடலாம்.